Thursday, April 28, 2011

கோ ஒரு அழகிய புகைப்"படம்"

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில், ஜீவா, அஜ்மல், கார்த்திகா மற்றும் பலர் இணைந்து நடித்து ரெட் ஜெயந்த் மூவீஸ் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம்.

           படத்தில் ஜீவா ஒரு முன்னணி செய்தித்தாளின் கேமரா மேனாக பணியாற்றுகிறார், படத்தின் முதல் காட்சியிலேயே பேங்க் கொள்ளையர்களை அவர் துரத்தி துரத்தி படம் பிடித்து அதன் மூலம் அவர்களை போலீசில் சிக்க வைக்கிறார், ஆக்ஷன் ஹீரோவாக அவர்களை புரட்டி எடுக்காமல் கேமராவோடுஅவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் காட்சியில்வித்தியாசம் காண்பிக்கிறார் இயக்குனர், அதிலும் அவர் phasor பைக்ல் வீலிங் செய்து போட்டோ எடுக்கும் காட்சி மிக அற்புதம், கேமராவோடு ஓடி வரும் அவரை திருடன் என்று நினைத்து கார்த்திகா புரட்டி எடுக்கும் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

ஜீவா ஒரு கேமரா மேனாக கச்சிதமாக தன் பணியை முடித்திருக்கிறார், எங்கு எது நடந்தாலும் உடனே கேமராவில் போட்டோ எடுப்பதும் அதனை பத்திரிகைக்கு அனுப்புவதும் என பல காட்சிகளில் தன் பணியை மிக சிறப்பாக முடித்திருக்கிறார், பிரகாஷ் ராஜ் ஒரு நிருபரை செருப்பால் அடிக்கும்போது அதை லாவகமாக படம் எடுக்கும் காட்சியும், ஓட்டு போட பணம் கொடுத்து கற்பூரம் அணைத்து சத்தியம் வாங்குவதை போட்டோ எடுக்கும் காட்சியும் மிக அருமை. சண்டை காட்சிகளில் மிக அழகாக செய்திருக்கிறார், படத்தில் நடிப்பதற்கு தனியாக எந்த காட்சியும் இல்லாவிட்டாலும் தன் பணியை நேர்த்தியாக செய்த ஜீவாவுக்கு சபாஷ், அவரின் மற்ற படங்களை விட இதில் அவர் மிக அழகாக தோற்றமளிக்கிறார்.

அஜ்மல் குழந்தை போன்ற முகத்தை வைத்து சிறகுகள் அமைப்பை நடத்தி ஓட்டு கேட்பதும், ஆளுங்கட்சியினரிடம் அடிவாங்குவதும், நக்சலைட்களுடன் சேர்ந்து தன் இருக்கும் மேடைக்கே வெடிகுண்டு வைப்பதும் அதனை வைத்து ஓட்டு வங்கி முதல்வர் ஆவதும், பின் உதவி செய்து நக்சல்களுக்கே துரோகம் செய்வதும், தன்னை பற்றிய உண்மை ஜீவாவிற்கு தெரியவரும் காட்சியில் மிகவும் அலட்சியமாக இருப்பதும் என நம்ப முடியாத வில்லத்தனமான வேலைகளை செய்கிறார், படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகிய இருவரும் இவரின் வில்லத்தனத்துக்கு முன்னால் அவர்களே தேவலாம் என்று தோன்றவைத்துவிட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு காட்சிகளில் மிளிர்கிறார்  அஜ்மல்.

படத்தில் கதாநாயகனுக்கு இணையாக பயணித்திருக்கும் மற்றொரு கதாநாயகன் கேமரா, ஜீவாவின் கழுத்தில் தொங்கும் கேமரா இல்லை, ஒளிப்பதிவாளர் ரிச்சர்டின் கையில் உள்ள கேமரா, ஒவ்வொரு பிரேமிலும் இயக்குனர் மற்றும் கேமரா மேனின் உழைப்பு தெரிகிறது, அமளி துமளி பாடலிலும் நக்சல்களை சுற்றி வளைத்து போலிசும் நக்சல்களும் மோதிக்கொள்ளும் துப்பாக்கி சண்டையிலும் ஒளிப்பதிவாளர் இப்படியெல்லாம் செய்ய இயலுமா என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறார். 

கார்த்திகா படத்தின் கதாநாயகி, மிக அழகாக இருக்கிறார் தாயை மிஞ்சுவிடுவர் போல அழகில் அவர் கண்களிலேயே நம் மனதை பறிக்கிறார்,

 சௌந்தர்யா சுட்டி பெண்ணாக கலக்குகிறார், கார்த்திகா சௌந்தர்யா இருவருமே தங்கள் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு பிளஸ் பாடல்கள், என்னமோ ஏதோ, அமளி துமளி பாடல்களில் விசில் பறக்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ் கலக்கியிருக்கிறார்.

கேமரா மேன் கே.வி.ஆனந்த் தன்னால் படமும் இயக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார், திரைக்கதை மிக அருமை, படத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்ற இயக்குனருக்கு நன்றி...
மொத்தத்தில் கோ குடும்பத்துடன் பார்க்க கூடிய பார்க்க முடிகிற தரமான படம்.
மனசாட்சி:காலேஜ் கட் அடிச்சிட்டு படத்துக்கு போனதே தப்பு இதுல பாத்துட்டு வந்து விமர்சனம் வேற எழுதுறிய சத்தியமா இந்த செமஸ்டர் உனக்கு புட்டுகும்டா. Related Posts Plugin for WordPress, Blogger...